நீங்கள் எப்போது ஒரு திரைப்படம் இயக்கப்போகிறீர்கள்? நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்ற கேள்வி இது. "நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது". இது அனைவருக்குமான என் பதில். ஒரு திரைப்படத்தை இயக்க நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உண்மையில் என் பதில் போலியானது.
எனக்கு ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு அவசியமற்றதாக தோன்றுகிறது . சிலசமயங்களில் நான் அதீதமான வெறுமையை உணர்கிறேன். அந்த வெறுமை என்னை ஒரு பள்ளத்தாக்கை நிறைக்கிற அமைதியாக்குகிறது எனக்கு தெரிந்ததெல்லாம், ஒரு மலையும் பள்ளத்தாக்கும் மட்டும் தான். பள்ளத்தாக்கின் குழந்தை நான் மலையை வியக்கிறேன். ஒரு போதும் நான் மலை உச்சியை சென்று பார்க்கப்போவதில்லை. என் இலக்கெல்லாம் என்னை நிறைக்கிற அந்த வெறுமையை சரியாக உணர்வதும் அதை உணர்த்துவதும் தான். அதற்குரிய திரைமொழியை நான் இயற்கையிடம் யாசிக்கிறேன். நான் ஒரு காட்டுவாசி. என் பள்ளத்தாக்கின் மீது உயர்ந்து நிற்கின்ற அந்த மலை தன்னிடமிருக்கிற காட்டை காண்பித்து என்னை நடுங்கச் செய்கிறது. அங்கிருந்து தான் என் எல்லா கேள்விகளும் பிறந்திருக்க வேண்டும். அந்த காடுகளை தங்கள் இருப்பிடமாக அறிகிற என் அயல்வாசிகளைப்போல் நானும் இருந்திருந்தால் நானும் குறிஞ்சியின் குழந்தையாக என்னை உணர்ந்திருப்பேன்.. ஆனால் அது சாத்தியமற்றுப் போய்விட்டது..
இன்னும் என்னை சுற்றி இருக்கிற இயற்கையை என்னால் முழுமையாக வாங்கிக்கொள்ள முடியவில்லை. என் சக மனிதர்களை சுதந்திரமாக வாசிக்க பழகவில்லை. என்னை சூழ்ந்து இருக்கின்ற இந்த இயற்கையிடமும் மனிதர்களிடமும் இருந்து தான் என் படைப்புகளுக்கான சாரங்களை வாங்கவேண்டும்.
இந்த ஒட்டு மொத்த வாழ்க்கையும் எனக்கு கற்றுக்கொடுத்தது "பசி-காமம்" என்ற இரண்டை தான். இவை இரண்டையும் கடக்காமல் நான் என் காடுகளை அடைவது சாத்தியமில்லை. காடுகளை அடையாமல் மலைகளின் மீது பயணம் செய்ய இயலாது.
காமம் வரமாகவும் பசி சாபமாகவும் இருக்கும் என் இயற்கையில் நான் சாபத்தை நீக்கி வரத்தை அடைவதில் குறியாக இருக்கிறேன்.எப்போது சாபம் என்னிடமிருந்து பூரணமாக விலகுமோ..! அப்போது நான் வரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு என் இயற்கையை கடந்து, என்னை சூழ்ந்து இருக்கிற பள்ளத்தாக்கின் மலைகளின் ரகசியங்களை பிழிந்து அதன் சாரங்களை காலியாகக்கிடக்கும்என் இயற்கையின் பாத்திரத்தில் நிரப்பி அந்த ரசத்தை உங்களுக்கு அருந்தத் தர இயலும். அதுவரையில் என்னை வேட்டையாடுகிற உங்கள் கேள்வியை நிறுத்துங்கள். நிச்சயமாக நம்புங்கள் காலியாக இருக்கிற பாத்திரத்தில் தான் முழுமையை ஊற்றி நிரப்ப இயலும்.