Sunday, April 16, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

தேன்கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி என்றேன் 
சிரித்தாள் 
கண்களிரண்டும் கார்த்திகை பூக்கள் என்றேன் 
சிமிட்டினாள்

பட்டாம்பூச்சிக் கதைகள்

சிம்ஸ் பூங்கா சாலையில் 
உன் சுட்டும் விரல் பிடித்து 
சுகமாய் நடந்தேன் 
காற்று கற்பூர மரத்தை தழுவ 
நழுவிய இல்லை ஒன்று
உன் கூந்தலில் விழ
இல்லை எடுப்பதாய் கூந்தல்
அளந்த விரல்கள்.
அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல
அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும்
என் ஆசை நான் சொன்னேன்
நம்மை நனைக்க
தயாரானது மழை
இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்
துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை

Saturday, April 15, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

பள்ளத்தாக்கெங்கும்
அடர்ந்தமௌனம்

அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்

கிழக்கின் மேகம் கருத்திருந்தது

அதிகாலைக்கு பின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி

பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்

எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று

எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழை ஈசல்களை சந்திப்பேனென்று

அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்

அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி

எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கிறேன் நான்

Saturday, April 8, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஞாயிறின் பிரிவை மறந்து 
திங்களின் வரவை 
கொண்டாட சொன்னவள் நீதானே..!
எல்லா அந்தியிலும் 
சூரியனை வழியனுப்பிவிட்டு
நிலவுக்காய் காத்திருக்கும் என் ஷாலினிக்கு
சில நட்சத்திரங்களைப்
பரிசளிக்க காத்திருக்கிறது வானம்

Thursday, April 6, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

மீண்டும் அந்த நிறுத்தத்தில்
நானும்..
நிற்காமல் கடந்த பேருந்தில்
நீயுமாக..
உன்னைச் சந்தித்த முதல் காலை
திரும்புமா என்று..
கனவுகளைக் கிளறியவாறே
அன்றாடம் கிழக்கில் எழுகிறது
பத்தொன்பது ஆண்டுகளைத் தின்று
தீர்த்த காதல்..


Wednesday, February 3, 2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

குளிரும் உன் நினைவுகளில்
நடுங்கிக்கொண்டிருக்கிறேன்
போர்வைக்குள் காதல் வைத்து
என்னைப் பொதிந்து கொள்

பட்டாம்பூச்சிக் கதைகள்

எப்போதும் அக்கா,
எப்போதாவது நந்து..
அபூர்வமான தருணங்களில் அம்மா. 
இப்படி எல்லாமும் ஆனவள் நீயே.
இப்போதெல்லாம் 
கோவிலுக்குப் போகத் தோன்றினால்
உன்னைச் சந்தித்துத்
வீடு திரும்புகிறேன்
இன்று போல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

எல்லோரும் ஏன் CHURCH க்கு போறாங்கனு தெரியாமலே நாள் தவறாம நான் CHURCH க்கு போகஆரம்பிச்சேன். 
இறக்கி விட யாருமே இல்லாத சிலுவையி ல் ரொம்ப காலமா தொங்கிட்டே இருந்தார் இயேசு சாமி. 
அவரோட வலி பத்தின எந்தக் கவலையும் இல்லாம, நந்தினியும், அமுதாவும் தினமும் சாமிகிட்ட ஒரு Dealing பேசிகிட்டிருந்தாங்க. 
சாமி பத்தின எந்த அக்கறையும் இல்லாம நான் மெழுகா உருகி, திரியா கருகிட்டு இருந்தேன். 
முள்கிரீடம், 
ஆணி,
சிலுவை.
எல்லாம் குறியீடுகளாய் மாறி இருந்தது.


பட்டாம்பூச்சிக் கதைகள்

அன்றாட அழைப்புகள் இல்லை
உள் பெட்டி திறக்கப்படவே இல்லை 
என் தினசரி வாழ்வில் 
தித்திக்கும் செய்திகள் இல்லை.
என்னை வாசிக்க மட்டும் 
நீ திறக்கும் முகப்புத்தகம்,
நீ வாசிக்க மட்டும்
நான் எழுதும் நாட்குறிப்புகள்.
லைக்குகளுக்கும்,
கமெண்ட்களுக்கும்
எப்போதும் புரிவதில்லை
நம் நட்பு.

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் போல்
கேட்பாரற்றுக் கிடக்கிறது
இதயம். 
உன் மௌனம்
அதை மயானமாக்கி 
கொண்டிருக்கிறது.

பட்டாம்பூச்சிக் கதைகள்

வெகுஜன இதழில்
அச்சுப் பிழையின்றி வெளிவந்த
முதல் கவிதையைப் போல் 
மறக்க முடியாதவள்.
நல்ல நூலின்
புரட்டப்படாத பக்கங்களைப் போல்
எதிர்பார்ப்புக்குரியவள்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நந்து:
எனக்காக கடைசியா ஒரு வாய் மட்டும் சாப்பிடு.
டவிஷ்:
போம்மா உனக்காக தான் இவ்ளோ நேரம் சாப்பிட்டேன்.
நந்து:
வெரிகுட் இவ்ளோ நேரம் எனக்காக சாப்பிட்ட. இப்போ உனக்காக ஒரு வாய் ப்ளீஸ்.
டவிஷ்:
ம்ம்ம் போ ம்மா..

Thursday, December 24, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

வசீகரிக்கும் அழகோடு 
கம்பீரமாக விரிந்து கிடக்கும் 
அந்தக் காட்டுக்குள் 
சுதந்திரமாக சுற்றித்திரியும் 
ஒரு பட்டாம்பூச்சி 
சிம்ம ராசியில் பிறந்திருக்கக்கூடும் .

பட்டாம்பூச்சிக் கதைகள்நான் விரும்பாத இடைவெளியில்
நமக்கான காதல் இருக்கிறது..


இன்னும் கொஞ்சம் விலகி நில்.

Monday, November 23, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்
தான் அமரும் இடமெல்லாம் 
கொலுவிருக்கும் பட்டாம்பூச்சியும் 
கொலு வைக்கக் கூடும்.

Saturday, November 21, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

இனி எந்தக் கடவுளாலும்
பிறிதொரு மனிதனாலும்

தரவியலாப் 

பின் மதியப் பொழுதொன்றில்..

பின்வாசல் 

மழைவீதியில் 

ஐந்தே நிமிடம் நடந்தேன் ..

இல்லை..

"கடந்தேன்

கடந்தேன் 

கடந்தேன்"..

"சொல்லொன்றில் தீராப் 
பொருள்கொண்ட 
வாழ்வன்றோ வரம்"
இவன் 
காமம் துறந்த ராவணன் 
ஆன கதையை 
இனி அந்த ராமனுக்குச் சொல்..!Thursday, September 24, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்


என் இனிய பட்டாம்பூச்சிக்கு: 

நீ வந்து அமராமல் 

என் பூக்கள் மணப்பதில்லை.                                         -இப்படிக்கு காடு.

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒரு நவம்பர் மாதத்தின் முதல் நாளில் இங்கு தான் அழகான அந்த வெள்ளை நாய்க்குட்டி உன் பின்னால் வாலாட்டிக் கொண்டே வந்தது..! அன்று பழுத்த இலைகளை கண்களாக்கி நம்மைப் பார்த்துக்கொண்டிருந்த மரங்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் நினைவுகளில். ஒவ்வொரு முறை கடக்கிறபோதும் வெள்ளை நாய்குட்டியாக மாறி வாலாட்டும் மனசை எங்கே ஒளித்து வைப்பது.

பட்டாம்பூச்சிக் கதைகள்


நமக்கேயான தனிமை 
வாய்க்கும் போதெல்லாம் 

நெருப்பை எரியவிட்டு 

பனியடர்ந்த பள்ளத்தாக்கின் 

குளிருக்குள் 

பதுங்கிக் கொண்டோமல்லவா..! 

அந்த ரகசியங்களை 

கிளன்டேல் காடுகள் 
பத்திரமாய் வைத்திருக்கிறது 
இன்றும்..!

பட்டாம்பூச்சிக் கதைகள்சுதேசிகளும்
விதேசிகளும்

பரதேசிகளும்

அன்றாடம் வந்து போகும்

உன்னைப்பற்றி

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்

சொன்ன விந்தையான

கதைகளிலிருந்து

துவங்கியிருக்க கூடும்

இரயில்மொழி.. 
குக்கூ... 
சிக்கு புக்கு...
சிக்கு புக்கு...

Tuesday, September 15, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்


சொல்ல நினைத்து 
சொல்லாமல் இருந்த கதைகள் 
நீராகவும், 
சொல்லி முடித்ததும் 
உறைந்து நின்ற கதைகள் 
பாறையாகவும்,
"இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது.
சொல்லாமல் இருந்த கதைகள்
உப்பாகவும் ,
சொல்லி முடித்த கதைகள்
மணலாகவும் மாறும்.
இந்த ஆற்றில் தான்,
பண்டிகை முடிந்ததும்
சாமியை கரைக்கும்
சடங்கையும் செய்கிறோம்.
கதைகளை போலவே கடவுளும்
கல்லில் உறைந்தும்,
நீரில் கரைந்தும்..


Friday, September 11, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

10:09:2015
நேற்று இரவெல்லாம் 
குடகு மலையாக கிடந்தது உடல். 
மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை, 
அழுது புலம்பிய மேகங்களை, 
குளிராய் தழுவிய காற்றின் கைகளை, 
அதிகாலை பனித்துளிகளால் 
ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை, 
கண்ட பின்பும் என் காதல் 
அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது 
என்று நம்புகிறாயா..! 
அது நீ போகும் திசையெல்லாம் 
ஒரு மெல்லிய இசையாகி 
உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ.


11:09:2015
வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..!
"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் 
வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..!

அப்படியா..! என்றாள்
"ஆமாம்" என்றேன்.
"அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள்.
"அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன்.
"அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள்.
"நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது" - என்றேன்.
"அப்படி சொன்னாதான அத நம்ம ஊருன்னு நீ ஒத்துக்குவ" - என்றாள்.
"அப்போ நீ சொன்ன மாதிரி அங்க வெயில் இல்லையா" என்றேன்..!
"அஞ்சேமுக்காலுக்கு எந்த ஊர்லப்பா வெயில் சுர்ருன்னு அடிக்குது" -என்றாள்.
"ஆனா அஞ்சேமுக்காலுக்கு எல்லா ஊர்லயும் கொஞ்சம் குளிருமில்ல"- என்றேன்.


12:09:2015
இன்று அதிகாலையும் 
நல்ல குளிர் என்றாள்
குடகில் குளிராமல் என்ன செய்யும்..!
எப்போதும் உன் உடலைத் 
தழுவியபடி இருக்கும் குளிராக 
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
வறண்ட உன் உதடுகளை
நாவினால் ஈரப்டுத்திக்கொண்டே இருக்கிறாய்,
உன் உதடாக 
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
குளிருக்கு இதமாய் 
கையுறை தரிக்கிறாய், 
நிராகரிப்பின் நெருப்பு 

கொழுந்துவிட்டு எரிகிறது என் கைகளில்..!

12:09:2015
மடிகேரியின் 
மலை முழுவதும் 
இருளும் பனியும் குளிருமாய் 
வியாபித்திருக்கிறது 
நம் உரையாடல்கள்..
நம் இருவருக்குமான இடைவெளியில் 
நெருப்பை எரியவிட்டு - பின் 
நிலவுக்குள் சென்று 
ஒளிந்து கொண்ட நேற்றைய இரவை 
பத்திரமாக வைத்திருக்கிறது 
காதல்


Saturday, August 29, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

எம் பெண்களின் விரல்களில் தேயிலை கறை படிந்திருந்தது, கொழுந்து கிள்ளலின் போது அழுந்திய நகக்கீறல்களில், தலைமுறைகளாய் விடியாத இரவுகளின் ஆன்மா அழுது கொண்டிருந்தது. அன்றாடம் சட்டை மாற்றி, சிலேட்டை எடுத்து புத்தகப்பைக்குள் திணிக்கையில் யாரேனும் புளிச்சான் கீரைக் கிழங்கோ, காக்காகரும்போ, பறித்து தருவார்கள் என்ற கனவும் இருந்து. “புட்டுவாத்தியார்” கடக்கையில், உர்ர்ரென்று இருந்த காடு, கண்ணாடி வாத்தியார் கடக்கையில் "க்ளுக்" கென்றும், 
                                   பூபதி டீச்சர் கடக்கும் போது பணிவோடும் சிரித்தது. அன்றாடம் ஊருக்குள் வரும் அந்த மலை ரயில் ரன்னிமேட்டை கடக்கையில், தோளில் ஏந்திய, ப்ளம்ஸ், பேரி, கொய்யா, ஆரஞ்சு பழக்கூடைகளில் குவாட்டருக்கான தேவை இருந்தது. ரயில் புறப்படுகையில், ராகவன் தேநீர் தயாரிக்க தொடங்குவது சாக்கு கட்டும் அவசரத்தில் சாப்பிட மறந்தவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. மனசுக்கு ஒவ்வாத மங்கையை அன்றாடம் புணர்வது போல் மழையும், கூடவே இருக்கும் கொலைகாரனின் அலட்சிய புன்னகை போல் குளிரும், பதுங்கு குழிக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் போல் பனியும், அறிவிக்கப்படாத அபாய எச்சரிக்கை போல் சருகுகளுக்கிடையில் அட்டை, பூரான், தேளும் இருந்தது.
                                     அன்றாடம் சாக்கடையை சுத்தம் செய்யும் காளிமுத்து அண்ணன் புழுக்கள் நெளியும் கழிவுகளை வாரிப்போடுகையில் நாம் அடிமைகளாய் வாழ்வதற்கான நியாயங்கள் அதில் நெளிந்து கொண்டிருந்தது. லாஸ் நீர்வீழ்ச்சியின் சுழலில் இருக்கும் மர்மம் போலவே வழுக்குப் பாறைகளாலான என் மனசும் இருந்தது.
                                   1997 July. பத்து நாட்களுக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. வழக்கத்துக்குமாறாக நரிக்கொட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாட்டுக்கு புல் அறுத்துப்போட வேண்டும் என்கிற கவலையில் மழையை கெட்டவார்த்தைகளால் சபித்துக் கொண்டிருந்தான் ராமர். வழக்கமாக குழாயடிக்கு வரும் பெண்கள் அன்று வாசலிலேயே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தனர். முந்தையநாள் இரவு எங்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் தடைபட்டிருந்தது. அப்பா விஜி எட்டாவுடன் மின் கம்பிகளை அண்ணாந்து பார்த்து எதோ பேசிக்கொண்டிருந்தார். முந்தைய இரவில் சோற்றுப்பாத்திரத்தினுள் மழை ஈசல்கள் செத்து விழுந்ததனால், சாப்பிடாமலே தூங்கி விட்டதாக கருப்பாயி பாட்டி அம்மாவிடம் புலம்பியது. பல் துலக்கியபடியே, மெல்ல குழாயடிக்கு வந்த குமாரும், ராஜாவும் கேசவன் தோட்டத்து பம்பளிமாஸ் பழங்களை நோட்டம்விட்டபடியே, ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னபூசாரி கவி, கோடாலியை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போவதை ஜாடைகாட்டி சுதேவன் சத்தமாக சிரித்தபோது சதீஷ் தலையிலடித்துக்கொண்டான். வீட்டு அட்டாளிக்கு மேலே கூடு கட்டியிருந்த சிட்டுக்குருவியின் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.
                                ஷூ மாட்டிக்கொண்டு கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் புத்தகத்துடன் குடையை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். “என்ன ஆனாலும் என் பையன் கரக்டா ஸ்கூல்க்கு போய்டுவான்” பரவால என்று கோசு அத்தை சொல்லியபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது. 0108 பேருந்து பழத்தோட்டத்தில் (ஆர்செடின்) இருந்து கிளம்பி நான்சச் ஐ வந்தடைந்திருந்தது. நான் வேகமாக நடக்க முயற்சி செய்தேன். 2ஆம் நம்பர் லைனை கடந்தபோது பேருந்து பள்ளத்தாக்கை (Glendale) கடந்திருந்தது.
                             
மழைபெய்து, சேறும் சகதியுமான அந்த வழியில் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. நான் காட்டேரி பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் 0108 போய்டுச்சு ஷிஜு என்று வடிவேலு சொன்னபோது கடைக்குள் இருந்த கௌசல்யா கைதட்டி சிரித்தது. என் கவலையும் களைப்பும் அதிகமாகியது. அடுத்த 3ஆவது நிமிடம் கண்ணாடியில் கிராமத்து தேவதை என்று எழுதப்பட்டிருந்த அந்த அதிகரட்டி பேருந்து என் முன்னே வந்து நின்றது.
-தொடரும்..

Friday, March 20, 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்உன்னோடு பரிமாற மட்டும்
என்று ஒதுக்கி வைத்த
வார்த்தைகளைத் தொலைத்து விட்டு 
வனாந்தரத்தில் அலைகிறது மொழி 
வெயிலில் கருகி 

மணலில் புதையுண்ட
வார்த்தைகளை மீட்டெடுக்க முடியாமல் 
தவிக்கிறேன் நான்...!

Monday, December 29, 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்


நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை..
நிராகரிப்புகளால்
என் இதயம்
கிழிகிற போதெல்லாம்
உன் நினைவென்னும்

ஊசியால்

நான் தைத்துக்கொண்ட

என் கடந்த காலங்கள்..