வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்

10:09:2015
நேற்று இரவெல்லாம் 
குடகு மலையாக கிடந்தது உடல். 
மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை, 
அழுது புலம்பிய மேகங்களை, 
குளிராய் தழுவிய காற்றின் கைகளை, 
அதிகாலை பனித்துளிகளால் 
ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை, 
கண்ட பின்பும் என் காதல் 
அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது 
என்று நம்புகிறாயா..! 
அது நீ போகும் திசையெல்லாம் 
ஒரு மெல்லிய இசையாகி 
உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ.


11:09:2015
வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..!
"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் 
வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..!

அப்படியா..! என்றாள்
"ஆமாம்" என்றேன்.
"அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள்.
"அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன்.
"அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள்.
"நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது" - என்றேன்.
"அப்படி சொன்னாதான அத நம்ம ஊருன்னு நீ ஒத்துக்குவ" - என்றாள்.
"அப்போ நீ சொன்ன மாதிரி அங்க வெயில் இல்லையா" என்றேன்..!
"அஞ்சேமுக்காலுக்கு எந்த ஊர்லப்பா வெயில் சுர்ருன்னு அடிக்குது" -என்றாள்.
"ஆனா அஞ்சேமுக்காலுக்கு எல்லா ஊர்லயும் கொஞ்சம் குளிருமில்ல"- என்றேன்.


12:09:2015
இன்று அதிகாலையும் 
நல்ல குளிர் என்றாள்
குடகில் குளிராமல் என்ன செய்யும்..!
எப்போதும் உன் உடலைத் 
தழுவியபடி இருக்கும் குளிராக 
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
வறண்ட உன் உதடுகளை
நாவினால் ஈரப்டுத்திக்கொண்டே இருக்கிறாய்,
உன் உதடாக 
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
குளிருக்கு இதமாய் 
கையுறை தரிக்கிறாய், 
நிராகரிப்பின் நெருப்பு 

கொழுந்துவிட்டு எரிகிறது என் கைகளில்..!





12:09:2015
மடிகேரியின் 
மலை முழுவதும் 
இருளும் பனியும் குளிருமாய் 
வியாபித்திருக்கிறது 
நம் உரையாடல்கள்..
நம் இருவருக்குமான இடைவெளியில் 
நெருப்பை எரியவிட்டு - பின் 
நிலவுக்குள் சென்று 
ஒளிந்து கொண்ட நேற்றைய இரவை 
பத்திரமாக வைத்திருக்கிறது 
காதல்


பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....