Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்

எம் பெண்களின் விரல்களில் தேயிலை கறை படிந்திருந்தது, கொழுந்து கிள்ளலின் போது அழுந்திய நகக்கீறல்களில், தலைமுறைகளாய் விடியாத இரவுகளின் ஆன்மா அழுது கொண்டிருந்தது. அன்றாடம் சட்டை மாற்றி, சிலேட்டை எடுத்து புத்தகப்பைக்குள் திணிக்கையில் யாரேனும் புளிச்சான் கீரைக் கிழங்கோ, காக்காகரும்போ, பறித்து தருவார்கள் என்ற கனவும் இருந்து. “புட்டுவாத்தியார்” கடக்கையில், உர்ர்ரென்று இருந்த காடு, கண்ணாடி வாத்தியார் கடக்கையில் "க்ளுக்" கென்றும், 
                                   பூபதி டீச்சர் கடக்கும் போது பணிவோடும் சிரித்தது. அன்றாடம் ஊருக்குள் வரும் அந்த மலை ரயில் ரன்னிமேட்டை கடக்கையில், தோளில் ஏந்திய, ப்ளம்ஸ், பேரி, கொய்யா, ஆரஞ்சு பழக்கூடைகளில் குவாட்டருக்கான தேவை இருந்தது. ரயில் புறப்படுகையில், ராகவன் தேநீர் தயாரிக்க தொடங்குவது சாக்கு கட்டும் அவசரத்தில் சாப்பிட மறந்தவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. மனசுக்கு ஒவ்வாத மங்கையை அன்றாடம் புணர்வது போல் மழையும், கூடவே இருக்கும் கொலைகாரனின் அலட்சிய புன்னகை போல் குளிரும், பதுங்கு குழிக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் போல் பனியும், அறிவிக்கப்படாத அபாய எச்சரிக்கை போல் சருகுகளுக்கிடையில் அட்டை, பூரான், தேளும் இருந்தது.
                                     அன்றாடம் சாக்கடையை சுத்தம் செய்யும் காளிமுத்து அண்ணன் புழுக்கள் நெளியும் கழிவுகளை வாரிப்போடுகையில் நாம் அடிமைகளாய் வாழ்வதற்கான நியாயங்கள் அதில் நெளிந்து கொண்டிருந்தது. லாஸ் நீர்வீழ்ச்சியின் சுழலில் இருக்கும் மர்மம் போலவே வழுக்குப் பாறைகளாலான என் மனசும் இருந்தது.




                                   1997 July. பத்து நாட்களுக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. வழக்கத்துக்குமாறாக நரிக்கொட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாட்டுக்கு புல் அறுத்துப்போட வேண்டும் என்கிற கவலையில் மழையை கெட்டவார்த்தைகளால் சபித்துக் கொண்டிருந்தான் ராமர். வழக்கமாக குழாயடிக்கு வரும் பெண்கள் அன்று வாசலிலேயே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தனர். முந்தையநாள் இரவு எங்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் தடைபட்டிருந்தது. அப்பா விஜி எட்டாவுடன் மின் கம்பிகளை அண்ணாந்து பார்த்து எதோ பேசிக்கொண்டிருந்தார். முந்தைய இரவில் சோற்றுப்பாத்திரத்தினுள் மழை ஈசல்கள் செத்து விழுந்ததனால், சாப்பிடாமலே தூங்கி விட்டதாக கருப்பாயி பாட்டி அம்மாவிடம் புலம்பியது. பல் துலக்கியபடியே, மெல்ல குழாயடிக்கு வந்த குமாரும், ராஜாவும் கேசவன் தோட்டத்து பம்பளிமாஸ் பழங்களை நோட்டம்விட்டபடியே, ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னபூசாரி கவி, கோடாலியை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போவதை ஜாடைகாட்டி சுதேவன் சத்தமாக சிரித்தபோது சதீஷ் தலையிலடித்துக்கொண்டான். வீட்டு அட்டாளிக்கு மேலே கூடு கட்டியிருந்த சிட்டுக்குருவியின் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.
                                ஷூ மாட்டிக்கொண்டு கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் புத்தகத்துடன் குடையை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். “என்ன ஆனாலும் என் பையன் கரக்டா ஸ்கூல்க்கு போய்டுவான்” பரவால என்று கோசு அத்தை சொல்லியபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது. 0108 பேருந்து பழத்தோட்டத்தில் (ஆர்செடின்) இருந்து கிளம்பி நான்சச் ஐ வந்தடைந்திருந்தது. நான் வேகமாக நடக்க முயற்சி செய்தேன். 2ஆம் நம்பர் லைனை கடந்தபோது பேருந்து பள்ளத்தாக்கை (Glendale) கடந்திருந்தது.
                             
மழைபெய்து, சேறும் சகதியுமான அந்த வழியில் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. நான் காட்டேரி பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் 0108 போய்டுச்சு ஷிஜு என்று வடிவேலு சொன்னபோது கடைக்குள் இருந்த கௌசல்யா கைதட்டி சிரித்தது. என் கவலையும் களைப்பும் அதிகமாகியது. அடுத்த 3ஆவது நிமிடம் கண்ணாடியில் கிராமத்து தேவதை என்று எழுதப்பட்டிருந்த அந்த அதிகரட்டி பேருந்து என் முன்னே வந்து நின்றது.
-தொடரும்..


Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

ஆதிக்குடில்

காமுற்ற ஆதிதெய்வம்  நிலத்தில் கீறிய நகசித்திரம் போல்  கண்களை ஆசிர்வதிக்கிறது  அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது.  பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை  எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன்  காய்ச்சிய  புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன்  கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச்  சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து  காட்டு நெல்லியின்  புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய  பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற  தேதிகளுக்கு முன்பே  மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!