வியாழன், 24 செப்டம்பர், 2015
பட்டாம்பூச்சிக் கதைகள்
ஒரு நவம்பர் மாதத்தின் முதல் நாளில் இங்கு தான் அழகான அந்த வெள்ளை நாய்க்குட்டி உன் பின்னால் வாலாட்டிக் கொண்டே வந்தது..! அன்று பழுத்த இலைகளை கண்களாக்கி நம்மைப் பார்த்துக்கொண்டிருந்த மரங்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் நினைவுகளில். ஒவ்வொரு முறை கடக்கிறபோதும் வெள்ளை நாய்குட்டியாக மாறி வாலாட்டும் மனசை எங்கே ஒளித்து வைப்பது.
செவ்வாய், 15 செப்டம்பர், 2015
பட்டாம்பூச்சிக் கதைகள்
சொல்ல நினைத்து
சொல்லாமல் இருந்த கதைகள்
நீராகவும்,
சொல்லி முடித்ததும்
உறைந்து நின்ற கதைகள்
பாறையாகவும்,
"இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது.
சொல்லாமல் இருந்த கதைகள்
உப்பாகவும் ,
சொல்லி முடித்த கதைகள்
மணலாகவும் மாறும்.
இந்த ஆற்றில் தான்,
பண்டிகை முடிந்ததும்
சாமியை கரைக்கும்
சடங்கையும் செய்கிறோம்.
கதைகளை போலவே கடவுளும்
கல்லில் உறைந்தும்,
நீரில் கரைந்தும்..
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
பட்டாம்பூச்சிக் கதைகள்
10:09:2015
நேற்று இரவெல்லாம்
குடகு மலையாக கிடந்தது உடல்.
மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை,
அழுது புலம்பிய மேகங்களை,
குளிராய் தழுவிய காற்றின் கைகளை,
அதிகாலை பனித்துளிகளால்
ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை,
கண்ட பின்பும் என் காதல்
அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது
என்று நம்புகிறாயா..!
அது நீ போகும் திசையெல்லாம்
ஒரு மெல்லிய இசையாகி
உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ.
11:09:2015
வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..!
"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..!
அப்படியா..! என்றாள்
"ஆமாம்" என்றேன்.
"அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள்.
"அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன்.
"அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள்.
"நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது" - என்றேன்.
"அப்படி சொன்னாதான அத நம்ம ஊருன்னு நீ ஒத்துக்குவ" - என்றாள்.
"அப்போ நீ சொன்ன மாதிரி அங்க வெயில் இல்லையா" என்றேன்..!
"அஞ்சேமுக்காலுக்கு எந்த ஊர்லப்பா வெயில் சுர்ருன்னு அடிக்குது" -என்றாள்.
"ஆனா அஞ்சேமுக்காலுக்கு எல்லா ஊர்லயும் கொஞ்சம் குளிருமில்ல"- என்றேன்.
12:09:2015
இன்று அதிகாலையும்
நல்ல குளிர் என்றாள்
குடகில் குளிராமல் என்ன செய்யும்..!
எப்போதும் உன் உடலைத்
தழுவியபடி இருக்கும் குளிராக
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
வறண்ட உன் உதடுகளை
நாவினால் ஈரப்டுத்திக்கொண்டே இருக்கிறாய்,
உன் உதடாக
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
குளிருக்கு இதமாய்
கையுறை தரிக்கிறாய்,
நிராகரிப்பின் நெருப்பு
கொழுந்துவிட்டு எரிகிறது என் கைகளில்..!
12:09:2015
மடிகேரியின்
மலை முழுவதும்
இருளும் பனியும் குளிருமாய்
வியாபித்திருக்கிறது
நம் உரையாடல்கள்..
நம் இருவருக்குமான இடைவெளியில்
நெருப்பை எரியவிட்டு - பின்
நிலவுக்குள் சென்று
ஒளிந்து கொண்ட நேற்றைய இரவை
பத்திரமாக வைத்திருக்கிறது
காதல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டாம்பூச்சிக் கதைகள்
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....

-
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ர...
-
எப்போதும் அக்கா, எப்போதாவது நந்து.. அபூர்வமான தருணங்களில் அம்மா. இப்படி எல்லாமும் ஆனவள் நீயே. இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகத் தோன்...