வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்


ஈக்களிடமிருந்து
தேனைத் திருடுவது போல்
உன்னிடமிருந்து கவிதைகளைத்
திருடுகிறேன்
"அடேய் திருட்டுப்பயலே"

என்று ஒற்றை வாக்கிய
அணிந்துரை எழுது
அது போதும்
நாளைக்கே புத்தகம்
போட்டுவிடுவேன்..!

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்


நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது  இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ரயில் சோறு தான். ஊட்டி ரெயில் என்று சொல்வார்களே..! - "சோறூட்டி ஓடும் ரெயில்"
இப்போதும் எங்கள் ஊரில் எல்லா குழந்தைகளுக்கும் இந்த புகைவண்டியைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள்
15 வயது வரை இந்த ரயிலை கையசைத்து வழியனுப்பி இருக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் குறைந்தது முப்பது கைகளையாவது பதிலுக்கு அசைக்காமல் கடந்ததில்லை இந்த புகைவண்டி..
அன்றாடம் எங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மையாக வந்து போகும் இந்த புகைவண்டியை, விஞ்ஞானக்கண் கொண்டு கண்டதில்லை இதுவரையில்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட குதுகலமாய் கையசைக்கும் ஒரு குழ்ந்தையாய் என்னை மாற்றிவிட்டுப் போன இந்த புகைவண்டி "ஆய்ய்.. ட்ரைன்நு" என்று அப்போது என்னை உள்ளுக்குள் சொல்ல வைத்ததில் வியப்பொன்றும் இல்லை.
தினந்தோறும் ஊருக்குள் வந்து போகும் பால்காரனைப் போல இயல்பாய் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த தீவண்டி. எப்போதும் தாமதமாகவே வரும் ஒன்றாம் வகுப்பு கண்ணாடி வாத்தியாருக்கும், காலை பத்து மணிக்கு தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரிக்க தயாராகும் ராகவனுக்கும் இந்த ரயில் தான் கடிகாரம்.
புகைப்படத்தில் இப்போது கடந்து கொண்டிருக்கும் பாலத்திற்குக் கிழ் தான் எங்கள் சாமி ஆறு ஓடிகொண்டிருக்கிறது. ( மாகாளியம்மன் கோவில் திருவிழா முடிந்ததும் சாமியை கரைக்கிற இடம்) இந்த பாலத்தில் அமர்ந்து தான் நான் வைரமுத்துவின் கவிதைகளை உரக்கப்பாடுவேன். அப்போது மலை என் குரலை எதிரொலிப்பதை, பள்ளத்தாக்கு என் குரலை ஆழ்ந்த ரகசியம் போல் சேமித்து வைப்பதை, சாட்சியாக நின்று கவனித்து இருக்கிறேன். இந்த ரயிலுக்கு கையசைத்தபடியே மயிலான் தோட்டத்துப் பாறையில் அம்மணமாய் ஓடி வந்து, ஆற்றுக்குள் அந்தர் பல்டி அடித்திருக்கிறேன். உள்ளிருந்து கையசைக்கும் பயணிகளுக்கு நாங்கள் அடிக்கும் அந்தர் பல்டியை சமர்ப்பிப்பது எங்கள் வழக்கம்.
என் உறவுகளை பிரிந்து நகரமாம் நரகத்துழழும் வலியை விடக் கொடுமையானது, கொஞ்ச காலமாய் இந்த ரயில்வண்டியை மறந்திருந்தது. மனசிலிருந்து நீள்கின்றன ஆயிரம் கைகள். மீண்டும் ஒருமுறை வழியனுப்ப.. அதுவரையில் எங்கள் மழலைகளுக்கு சோறூட்டி போகும் ரெயிலுக்கு தேயிலைத் தோட்டத்து சைப்பர் மரங்கள் என் கைகள் என அசைந்துகொண்டே இருக்கும்.


சனி, 15 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்




நீங்கள் எப்போது ஒரு திரைப்படம் இயக்கப்போகிறீர்கள்? நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்ற கேள்வி இது. "நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது". இது அனைவருக்குமான என் பதில். ஒரு திரைப்படத்தை இயக்க நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உண்மையில் என் பதில் போலியானது.
எனக்கு ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு அவசியமற்றதாக தோன்றுகிறது . சிலசமயங்களில் நான் அதீதமான வெறுமையை உணர்கிறேன். அந்த வெறுமை என்னை ஒரு பள்ளத்தாக்கை நிறைக்கிற அமைதியாக்குகிறது எனக்கு தெரிந்ததெல்லாம், ஒரு மலையும் பள்ளத்தாக்கும் மட்டும் தான். பள்ளத்தாக்கின் குழந்தை நான் மலையை வியக்கிறேன். ஒரு போதும் நான் மலை உச்சியை சென்று பார்க்கப்போவதில்லை. என் இலக்கெல்லாம் என்னை நிறைக்கிற அந்த வெறுமையை சரியாக உணர்வதும் அதை உணர்த்துவதும் தான். அதற்குரிய திரைமொழியை நான் இயற்கையிடம் யாசிக்கிறேன். நான் ஒரு காட்டுவாசி. என் பள்ளத்தாக்கின் மீது உயர்ந்து நிற்கின்ற அந்த மலை தன்னிடமிருக்கிற காட்டை காண்பித்து என்னை நடுங்கச் செய்கிறது. அங்கிருந்து தான் என் எல்லா கேள்விகளும் பிறந்திருக்க வேண்டும். அந்த காடுகளை தங்கள் இருப்பிடமாக அறிகிற என் அயல்வாசிகளைப்போல் நானும் இருந்திருந்தால் நானும் குறிஞ்சியின் குழந்தையாக என்னை உணர்ந்திருப்பேன்.. ஆனால் அது சாத்தியமற்றுப் போய்விட்டது..
இன்னும் என்னை சுற்றி இருக்கிற இயற்கையை என்னால் முழுமையாக வாங்கிக்கொள்ள முடியவில்லை. என் சக மனிதர்களை சுதந்திரமாக வாசிக்க பழகவில்லை. என்னை சூழ்ந்து இருக்கின்ற இந்த இயற்கையிடமும் மனிதர்களிடமும் இருந்து தான் என் படைப்புகளுக்கான சாரங்களை வாங்கவேண்டும்.
இந்த ஒட்டு மொத்த வாழ்க்கையும் எனக்கு கற்றுக்கொடுத்தது "பசி-காமம்" என்ற இரண்டை தான். இவை இரண்டையும் கடக்காமல் நான் என் காடுகளை அடைவது சாத்தியமில்லை. காடுகளை அடையாமல் மலைகளின் மீது பயணம் செய்ய இயலாது.
காமம் வரமாகவும் பசி சாபமாகவும் இருக்கும் என் இயற்கையில் நான் சாபத்தை நீக்கி வரத்தை அடைவதில் குறியாக இருக்கிறேன்.எப்போது சாபம் என்னிடமிருந்து பூரணமாக விலகுமோ..! அப்போது நான் வரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு என் இயற்கையை கடந்து, என்னை சூழ்ந்து இருக்கிற பள்ளத்தாக்கின் மலைகளின் ரகசியங்களை பிழிந்து அதன் சாரங்களை காலியாகக்கிடக்கும்என் இயற்கையின் பாத்திரத்தில் நிரப்பி அந்த ரசத்தை உங்களுக்கு அருந்தத் தர இயலும். அதுவரையில் என்னை வேட்டையாடுகிற உங்கள் கேள்வியை நிறுத்துங்கள். நிச்சயமாக நம்புங்கள் காலியாக இருக்கிற பாத்திரத்தில் தான் முழுமையை ஊற்றி நிரப்ப இயலும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்




பழகிப்பார் தெரியும்
என் பட்டாம்பூச்சி பற்றி
அதன் பின்
இருட்டிலும் தேடுவாய்
நீ அறிந்த
வண்ணத்தையும்
நான் உணர்ந்த
வாசத்தையும்
Add Image

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்




சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையின் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் எங்கள் வழக்கமான குட்டி சுவற்றில் நண்பர்களோடு சிகரெட்டும் சிரிப்புமாக இருந்த ஒரு மாலைப்பொழுதில் அலெக்ஸ் லாரன்சிடம் இருந்து அழைப்பு வந்தது. அது, ஊட்டி ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட என் பள்ளி ஆசிரியர் பீட்டரின் மரணச் செய்தி. மிக துயரமான செய்தி அது. அன்று இரவு ரம்பா பாருக்கு சென்று நிறைய குடித்தேன், சுப்பு மெஸ்ஸில் இருக்கும் சப்ளையரோடு வாய்த்தகராறு முற்றி அவரை ஆத்திரத்தில் தாறுமாறாக போட்டு உதைத்தேன். நண்பர்கள் சண்டையை நிறுத்தி என்னை சமாதனாம் செய்து கல்லூரி விடுதியில் ஒரு அறையில் போட்டு அடைத்தனர். பெரும் கூச்சலுக்கு பிறகு ஒரு காகிதமும் பேனாவும் கொடுத்துவிட்டு ஏதாவது எழுதுங்கண்ணா மனசு கொஞ்சம் ப்ரீ ஆயிடும் என்று ராஜசேகர் சொல்ல.. ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்றேன்.. தரப்பட்டது. இன்னும் கொஞ்சம் காகிதங்கள் வேண்டும் என்றேன். அதையும் கொண்டு தந்து விட்டு அண்ணா பக்கத்துக்கு ரூம்ல தான் இருக்கேன் ஏதாவது வேணும்னா கூப்பிடுங்கண்ணா என்று சொல்லிவிட்டு அறைக்கதவு தாழிடப்பட்டது. ஏதேதோ எழுதுகிறேன்.. என்னை அறியாமல் மெல்ல உறங்கிப்போகிறேன். அதன் பின் சில நாட்கள் கழித்து ராஜசேகர் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுக்கிறான். அதில் சில வரிகளில் அடிக்கோடு இடப்படிருக்கிறது. அது போதையில் நான் எழுதிய காகிதம் என்றாலும் சில வரிகள். வேறு மாதிரி இருந்தது.
அது..
" கொடைக்கானலுக்கு நான்கு முறை சென்றிருக்கிறேன் ஒருமுறை தற்கொலை செய்வதற்கு சென்ற கொடைக்கானலை கொஞ்சம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறேன் கொடைக்கானலை தவிர வேறெங்காவது நான் தேர்ந்திருந்தால் அந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம்.
இரவெல்லாம் அந்த சாலையில் இருந்து ஏரியை பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று இரவு அந்த ஏரி என் குழப்பமான மனதின் அலைகளை வாங்கி ஒரு ஆழ்ந்த ரகசியமென தனக்குள் புதைத்திருக்கலாம்.
தாகம் தணிக்க வரும் பறவை ஒன்று என் இரகசியங்களைக் குடித்திருக்கலாம். கடைசியாக சிகரெட் வாங்கிய கடையில் இருந்த கிழவனுக்கு என் மேல் எழுந்த சந்தேகத்தை, மேகங்களை போர்த்திக்கொண்டு கதகதப்பாய் உறங்கிய நிலா ஒரு கனவென உணர்ந்திருக்கலாம்.
அந்த இடமெங்கும் என்னை நோக்கி கைகளை அசைத்துகொண்டிருந்த மரங்கள் அமைதியாக பாடியது என் அம்மாவின் பிரார்த்தனையாகவும் இருக்கலாம்.
என்னை அதட்டி பேருந்து நிலையத்திற்கு விரட்டிய காவல்காரனின் குரல், என் தந்தையின் கவலையாகவும் இருக்கலாம்.
அன்றிரவு எனக்குள் பிறந்த தெளிவு கடவுளின் கருணையாக இருக்கலாம்.
என் பிறந்த பூமியின் தொடர்ச்சிதானே அந்த மலைச்சிகரங்கள்.. ஒருவேளை சிகரங்கள் அந்த பள்ளத்தாக்கிடம் என் கடமைகளை பற்றி சொல்லி இருக்கலாம். "
எவ்வளவு யோசித்தாலும் நான் ஏன் இந்த வரிகளை எழுதினேன் எனக்கு புரியவில்லை.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்



வாழ்வின் அவசரம்
முகத்திலறைய
முதுகில் அறையும்
வெயிலின் கரங்களை
சபித்துக்கொண்டே நடந்தேன்
மாநகர வீதியில்
நகரத்தெருக்களில் நடந்து
களைப்புற்று ஒதுங்கினேன்
பயணிகள் நிழற்குடையில்
"மச்சான்" என்ற குரலில்
அதிர்ந்து நிமிர்ந்தேன்
கல்லூரி வாழ்வில்
பழகிப்பிரிந்த
குட்டிசுவர்வாசிகளில் ஒருவன்
எப்பிடிடா இருக்க
உன் ஆளு எப்படி இருக்கா
என்ன பண்ற நீ எங்க இருக்க.....
அவன் கேட்டுக்கொண்டே இருக்கையில்
பதில்களேதுமற்ற நான்
மீண்டும்
ஒரு உபயோகமற்ற பொழுதில்
உன்னை சந்திக்கிறேன் என்று
எதிரில் வந்த பேருந்தில்
அவசரமாய் ஏறித் தொலைத்தேன்
அவன் நட்பை...

பட்டாம்பூச்சிக் கதைகள்


ஈரப்படுத்தப்பட்ட
கனவின் வெள்ளை துணிக்குள்
கொஞ்சம் விதைகளை வைத்திருக்கிறேன்
நடவின் பாடல்களைப்பாடிக்கொண்டு
அறுவடை நாட்களை கனவு காண்கிறேன்
நிலம் இறுகி
பாறையாகிக்கொண்டிருக்கிறது..

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்



ஒவ்வொரு முறையும்
என்னை சந்திக்கிறீர்கள்
உங்கள் முன் முடிவுகளோடு
எங்கிருந்து தொடங்குவது
என்று தெரியாமலே
எல்லாவற்றையும்
மறைத்து விடுகிறேன்
உங்களிடமிருந்து.

பட்டாம்பூச்சிக் கதைகள்



வெயிலும்
வேர்வையில் நாறிய உடலும்
கசங்கிய உடைகளும்
கலங்கிய விழிகளுமாய்
பசியோடு பெருநகர வீதிகளில்
வேலைதேடும் யாவருக்கும்
வாய்த்து விடுவதில்லை
பெட்ரோல் நிரப்பிய வாகனமும்,
புகைப்பிடிக்க
தேநீர் பருகவென
சில்லறை தந்துதவும் நண்பர்கள்..
தேடித் தெருவில் எதையோ தின்று
சுதந்திரமாய் பெருவழிகளில் அலையும்
தெரு நாய்களுக்கிருக்கும் மரியாதை கூட
எனக்கிருக்கப் போவதில்லை
ஒரு நல்ல வேலைகிடைக்கும் வரை.
தன் மீது விழும்
தூய மழைநீரை
பற்றிய கவலைகள் ஏதுமற்று
தேங்கிக்கிடக்கும் கூவமென
கனவுகள்.
பெருநகர வீதிகளில் ஓடும்
மழைவெள்ளம் போலாகும் மனசு
நகரத்தெருக்களில்
சோற்றுக்க்காகவென
ஓடும் அவசரம்
வீதிகளுக்கடியில் ஓடிகொண்டிருக்கும்
சாக்கடைஎன உள்ளுக்குள்
நாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு
நகரமாகும் மனசின் நியாபக தெருக்களில்
கேட்ப்பாரற்றுக் கிடக்கிறது
புத்தகப் பையோடு
கொஞ்சம் புகழையும்
சுமந்த என் இறந்தகாலம்...

பட்டாம்பூச்சிக் கதைகள்



தேயிலை மரங்கள்
செடிகளாய்
கவாத்து செய்யப்பட்ட
பச்சைப்பள்ளத்தாக்கு
கருங்கல்லின் மேல்
செம்மண் குழைத்து தேய்த்து
சுண்ணாம்பு பூசிய வீடு..
மூடுபனியின்
குளிர்ந்த கரங்களின் தழுவலில்
நடுங்கிக்கொண்டிருக்கும்
வயோதிகனின் கடைசி மூச்சென
கதவிடுக்கில் நுழைகிறது காற்று
காலாண்டு பகல்பொழுதை
கம்பளிக்குள் திணிக்கிறது குளிர்.

பட்டாம்பூச்சிக் கதைகள்


பள்ளத்தாக்கெங்கும்
அடர்ந்தமௌனம்
அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்
கிழக்கின்மேகம் கருத்திருந்தது
அதிகாலைக்குபின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி
பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்
எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று
எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழைஈசல்களை சந்திப்பேனென்று
அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்
அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி
எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கின்றேன் நான்..

பட்டாம்பூச்சிக் கதைகள்


ஆற்றங்கரையோரம்
ஆரஞ்சு மரமாய் வீற்றிருந்தாய்
நானும் அங்கேதான்
யாரும் விரும்பாத
நீர் உறிஞ்சி மரமாய் நின்றிருந்தேன்..

நதிக்கரை பள்ளத்தாக்கெங்கும்
பலவண்ண மலர்களாய் மலர்ந்திருந்தாய்
நான் அந்த மலையுச்சியில்
மரமாய் நின்று
என் பழுத்த இலைகளை
உனக்கு பரிசாய் அனுப்பினேன்

பட்டாம்பூச்சிக் கதைகள்

எஞ்சி இருக்கும் இந்த வாழ்வு 
அவள் நினைவுகளை 
பத்திரப் படுத்துவதற்கான 
கால அவகாசம் மட்டுமே.


பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....