பட்டாம்பூச்சிக் கதைகள்


"கொடைக்கானலுக்கு நான்கு முறை சென்றிருக்கிறேன்.

ஒருமுறை தற்கொலை செய்வதற்கு சென்ற கொடைக்கானலை கொஞ்சம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறேன் கொடைக்கானலை தவிர வேறெங்காவது நான் தேர்ந்திருந்தால் அந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம்.

இரவெல்லாம் அந்த சாலையில் இருந்து ஏரியை பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று இரவு அந்த ஏரி என் குழப்பமான மனதின் அலைகளை வாங்கி ஒரு ஆழ்ந்த ரகசியமென தனக்குள் புதைத்திருக்கலாம்.


தாகம் தணிக்க வரும் பறவை ஒன்று என் இரகசியங்களைக் குடித்திருக்கலாம். 

கடைசியாக சிகரெட் வாங்கிய கடையில் இருந்த கிழவனுக்கு என் மேல் எழுந்த சந்தேகத்தை, மேகங்களை போர்த்திக்கொண்டு கதகதப்பாய் உறங்கிய நிலா ஒரு கனவென உணர்ந்திருக்கலாம்.

அந்த இடமெங்கும் என்னை நோக்கி கைகளை அசைத்துகொண்டிருந்த மரங்கள் அமைதியாக பாடியது என் அம்மாவின் பிரார்த்தனையாகவும் இருக்கலாம்.

என்னை அதட்டி பேருந்து நிலையத்திற்கு விரட்டிய காவல்காரனின் குரல், என் தந்தையின் கவலையாகவும் இருக்கலாம்.

அன்றிரவு எனக்குள் பிறந்த தெளிவு கடவுளின் கருணையாக இருக்கலாம்.

என் பிறந்த பூமியின் தொடர்ச்சிதானே அந்த மலைச்சிகரங்கள்.. ஒருவேளை சிகரங்கள் அந்த பள்ளத்தாக்கிடம் என் கடமைகளை பற்றி சொல்லி இருக்கலாம். "

எவ்வளவு யோசித்தாலும் நான் ஏன் இந்த வரிகளை எழுதினேன் எனக்கு புரியவில்லை.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்