Skip to main content

Posts

Showing posts from 2021

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் . சைப்ரஸ் மரங்களின் மூச்சென மலைகளிலிருந்து எழும்பி பள்ளத்தாக்கினை இசையால் நிறைத்துச் செல்கிறது ஆன்மாவின் காதல். நீலகிரி மலை சிகரங்களில் இயற்கையின் மொழியாய் வியாபித்திருக்கிறது அவளின் மௌனம். காட்டின் அடர்ந்த தனிமையிலிருந்து வெளியேறி சிகரங்களைத் தழுவிச் செல்கிறது ஒரு பறவையின் பாடல் வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எழுதிய கவிதையாக மாறி காற்றில் தொற்றிக் கொள்கிறது அவளின் தெய்வீகம்.

பட்டாம்பூச்சி

 ஆயர்பாடியில்  அன்றொருநாள் ஆலிலையில்   காதலின் மைதடவி ஆதிலிபியில்  மாயக்குழலூதி கருவிழித்தடத்தில்  மயிலிறகால் கண்ணன் எழுதிய  முதல் கவிதை  நந்தினி.

ஆதிக்குடில்

காமுற்ற ஆதிதெய்வம்  நிலத்தில் கீறிய நகசித்திரம் போல்  கண்களை ஆசிர்வதிக்கிறது  அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது.  பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை  எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன்  காய்ச்சிய  புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன்  கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச்  சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து  காட்டு நெல்லியின்  புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய  பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற  தேதிகளுக்கு முன்பே  மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.

மே 30 1982

அந்நாளில் என் இதயம் ஆஸ்பென் மலைச்சிகரத்தில் இருந்தது பால்வெளியில் உருகிய லாவா எனக்கென குளிர்ந்து பனித்துளியாகி நண்பகல் மென் சூட்டில் நாசிவழி ஆவியாகி ஆதியில் என்னுள் நுழைந்தவள் நீ. ஆஸ்பென் ஸ்நோமாஸ் பள்ளத்தாக்கிலிருந்து பனிச் சிகரங்களை நோக்கி நடக்கும் பால்நிறப் பிள்ளைகளின் ஒளிரும் கண்களில். பனிச்சறுக்கில் துள்ளிக் குதித்தோடும் குதூகலங்களில் துளிர்க்கிறது  உன் ஞாபகங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும் நீ பூமிக்கு வந்த நாளில் வானத்தில் ஒரு நட்சத்திரம் தொலைந்த கதை.