Skip to main content

Posts

Showing posts from August 3, 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கிறீர்கள் உங்கள் முன் முடிவுகளோடு எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமலே எல்லாவற்றையும் மறைத்து விடுகிறேன் உங்களிடமிருந்து.

பட்டாம்பூச்சிக் கதைகள்

வெயிலும் வேர்வையில் நாறிய உடலும் கசங்கிய உடைகளும் கலங்கிய விழிகளுமாய் பசியோடு பெருநகர வீதிகளில் வேலைதேடும் யாவருக்கும் வாய்த்து விடுவதில்லை பெட்ரோல் நிரப்பிய வாகனமும், புகைப்பிடிக்க தேநீர் பருகவென சில்லறை தந்துதவும் நண்பர்கள்.. தேடித் தெருவில் எதையோ தின்று சுதந்திரமாய் பெருவழிகளில் அலையும் தெரு நாய்களுக்கிருக்கும் மரியாதை கூட எனக்கிருக்கப் போவதில்லை ஒரு நல்ல வேலைகிடைக்கும் வரை. தன் மீது விழும் தூய மழைநீரை பற்றிய கவலைகள் ஏதுமற்று தேங்கிக்கிடக்கும் கூவமென கனவுகள். பெருநகர வீதிகளில் ஓடும் மழைவெள்ளம் போலாகும் மனசு நகரத்தெருக்களில் சோற்றுக்க்காகவென ஓடும் அவசரம் வீதிகளுக்கடியில் ஓடிகொண்டிருக்கும் சாக்கடைஎன உள்ளுக்குள் நாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு நகரமாகும் மனசின் நியாபக தெருக்களில் கேட்ப்பாரற்றுக் கிடக்கிறது புத்தகப் பையோடு கொஞ்சம் புகழையும் சுமந்த என் இறந்தகாலம்...

பட்டாம்பூச்சிக் கதைகள்

தேயிலை மரங்கள் செடிகளாய் கவாத்து செய்யப்பட்ட பச்சைப்பள்ளத்தாக்கு கருங்கல்லின் மேல் செம்மண் குழைத்து தேய்த்து சுண்ணாம்பு பூசிய வீடு.. மூடுபனியின் குளிர்ந்த கரங்களின் தழுவலில் நடுங்கிக்கொண்டிருக்கும் வயோதிகனின் கடைசி மூச்சென கதவிடுக்கில் நுழைகிறது காற்று காலாண்டு பகல்பொழுதை கம்பளிக்குள் திணிக்கிறது குளிர்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

பள்ளத்தாக்கெங்கும் அடர்ந்தமௌனம் அருகிலேங்கோ அத்திமரம் பூத்திருக்கலாம் கிழக்கின்மேகம் கருத்திருந்தது அதிகாலைக்குபின்னும் வெகுநேரம் புல்லை புணர்ந்து கிடந்தது பனி பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில் எறும்புகள் அறிந்திருந்தன மழைக்காலத்தின் ஆரம்பநாள் அதுவென்று எனக்கு நம்பிக்கை இருந்தது நாளை மழைஈசல்களை சந்திப்பேனென்று அதற்குள் நான் அவளை சந்தித்தாக வேண்டும் அந்நேரம் பிரபஞ்சமெங்கும் கைகளை அசைக்கிறாள் நந்தினி எல்லைஇல்லாப் பெருவெளியில் சிறகுகளின்றி பறக்கின்றேன் நான்..

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஆற்றங்கரையோரம் ஆரஞ்சு மரமாய் வீற்றிருந்தாய் நானும் அங்கேதான் யாரும் விரும்பாத நீர் உறிஞ்சி மரமாய் நின்றிருந்தேன்.. நதிக்கரை பள்ளத்தாக்கெங்கும் பலவண்ண மலர்களாய் மலர்ந்திருந்தாய் நான் அந்த மலையுச்சியில் மரமாய் நின்று என் பழுத்த இலைகளை உனக்கு பரிசாய் அனுப்பினேன்