Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்

எம் பெண்களின் விரல்களில் தேயிலை கறை படிந்திருந்தது, கொழுந்து கிள்ளலின் போது அழுந்திய நகக்கீறல்களில், தலைமுறைகளாய் விடியாத இரவுகளின் ஆன்மா அழுது கொண்டிருந்தது. அன்றாடம் சட்டை மாற்றி, சிலேட்டை எடுத்து புத்தகப்பைக்குள் திணிக்கையில் யாரேனும் புளிச்சான் கீரைக் கிழங்கோ, காக்காகரும்போ, பறித்து தருவார்கள் என்ற கனவும் இருந்து. “புட்டுவாத்தியார்” கடக்கையில், உர்ர்ரென்று இருந்த காடு, கண்ணாடி வாத்தியார் கடக்கையில் "க்ளுக்" கென்றும், 
                                   பூபதி டீச்சர் கடக்கும் போது பணிவோடும் சிரித்தது. அன்றாடம் ஊருக்குள் வரும் அந்த மலை ரயில் ரன்னிமேட்டை கடக்கையில், தோளில் ஏந்திய, ப்ளம்ஸ், பேரி, கொய்யா, ஆரஞ்சு பழக்கூடைகளில் குவாட்டருக்கான தேவை இருந்தது. ரயில் புறப்படுகையில், ராகவன் தேநீர் தயாரிக்க தொடங்குவது சாக்கு கட்டும் அவசரத்தில் சாப்பிட மறந்தவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது. மனசுக்கு ஒவ்வாத மங்கையை அன்றாடம் புணர்வது போல் மழையும், கூடவே இருக்கும் கொலைகாரனின் அலட்சிய புன்னகை போல் குளிரும், பதுங்கு குழிக்குள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் போல் பனியும், அறிவிக்கப்படாத அபாய எச்சரிக்கை போல் சருகுகளுக்கிடையில் அட்டை, பூரான், தேளும் இருந்தது.
                                     அன்றாடம் சாக்கடையை சுத்தம் செய்யும் காளிமுத்து அண்ணன் புழுக்கள் நெளியும் கழிவுகளை வாரிப்போடுகையில் நாம் அடிமைகளாய் வாழ்வதற்கான நியாயங்கள் அதில் நெளிந்து கொண்டிருந்தது. லாஸ் நீர்வீழ்ச்சியின் சுழலில் இருக்கும் மர்மம் போலவே வழுக்குப் பாறைகளாலான என் மனசும் இருந்தது.




                                   1997 July. பத்து நாட்களுக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. வழக்கத்துக்குமாறாக நரிக்கொட்டை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாட்டுக்கு புல் அறுத்துப்போட வேண்டும் என்கிற கவலையில் மழையை கெட்டவார்த்தைகளால் சபித்துக் கொண்டிருந்தான் ராமர். வழக்கமாக குழாயடிக்கு வரும் பெண்கள் அன்று வாசலிலேயே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தனர். முந்தையநாள் இரவு எங்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் தடைபட்டிருந்தது. அப்பா விஜி எட்டாவுடன் மின் கம்பிகளை அண்ணாந்து பார்த்து எதோ பேசிக்கொண்டிருந்தார். முந்தைய இரவில் சோற்றுப்பாத்திரத்தினுள் மழை ஈசல்கள் செத்து விழுந்ததனால், சாப்பிடாமலே தூங்கி விட்டதாக கருப்பாயி பாட்டி அம்மாவிடம் புலம்பியது. பல் துலக்கியபடியே, மெல்ல குழாயடிக்கு வந்த குமாரும், ராஜாவும் கேசவன் தோட்டத்து பம்பளிமாஸ் பழங்களை நோட்டம்விட்டபடியே, ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னபூசாரி கவி, கோடாலியை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போவதை ஜாடைகாட்டி சுதேவன் சத்தமாக சிரித்தபோது சதீஷ் தலையிலடித்துக்கொண்டான். வீட்டு அட்டாளிக்கு மேலே கூடு கட்டியிருந்த சிட்டுக்குருவியின் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.
                                ஷூ மாட்டிக்கொண்டு கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் புத்தகத்துடன் குடையை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். “என்ன ஆனாலும் என் பையன் கரக்டா ஸ்கூல்க்கு போய்டுவான்” பரவால என்று கோசு அத்தை சொல்லியபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது. 0108 பேருந்து பழத்தோட்டத்தில் (ஆர்செடின்) இருந்து கிளம்பி நான்சச் ஐ வந்தடைந்திருந்தது. நான் வேகமாக நடக்க முயற்சி செய்தேன். 2ஆம் நம்பர் லைனை கடந்தபோது பேருந்து பள்ளத்தாக்கை (Glendale) கடந்திருந்தது.
                             
மழைபெய்து, சேறும் சகதியுமான அந்த வழியில் என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. நான் காட்டேரி பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் 0108 போய்டுச்சு ஷிஜு என்று வடிவேலு சொன்னபோது கடைக்குள் இருந்த கௌசல்யா கைதட்டி சிரித்தது. என் கவலையும் களைப்பும் அதிகமாகியது. அடுத்த 3ஆவது நிமிடம் கண்ணாடியில் கிராமத்து தேவதை என்று எழுதப்பட்டிருந்த அந்த அதிகரட்டி பேருந்து என் முன்னே வந்து நின்றது.
-தொடரும்..


Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது   இந்த  புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ரயில் சோறு தான். ஊட்டி ரெயில் என்று சொல்வார்களே..! -  "சோறூட்டி ஓடும் ரெயில்" இப்போதும் எங்கள் ஊரில் எல்லா குழந்தைகளுக்கும் இந்த புகைவண்டியைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள் 15 வயது வரை இந்த ரயிலை கையசைத்து வழியனுப்பி இருக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் குறைந்தது முப்பது கைகளையாவது பதிலுக்கு அசைக்காமல் கடந்ததில்லை இந்த புகைவண்டி.. அன்றாடம் எங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மையாக வந்து போகும் இந்த புகைவண்டியை, விஞ்ஞானக்கண் கொண்டு கண்டதில்லை இதுவரையில்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட குதுகலமாய் கையசைக்கும் ஒரு குழ்ந்தையாய் என்னை மாற்றிவிட்டுப் போன இந்த புகைவண்டி "ஆய்ய்.. ட்ரைன்நு" என்று அப்போது என்னை உள்ளுக்குள் சொல்ல வைத்ததில் வியப்பொன்றும் இல்லை. தினந்தோறும் ஊருக்குள் வந்து போகும் பால்காரனைப் போல இயல்பாய் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த தீவண்டி. எப்போதும் தாமதமாகவே வரும் ஒன்றாம் வகுப்பு கண்ணாடி வாத்தியாருக்கும், காலை பத

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.. நிராகரிப்புகளால் என் இதயம் கிழிகிற போதெல்லாம் உன் நினைவென்னும் ஊசியால் நான் தைத்துக்கொண்ட என் கடந்த காலங்கள்..          

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒரு தேயிலை தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியின்  எளிய குடும்பம் அது.  அந்த மலைகிராமத்தில்  ஒரு அரசு மருத்துவமனையில் 1983ன் மே மாதத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தையை, தூக்கி கொண்டு அங்கும் இங்கும் சில செவிலியர்கள் அலைந்து கொண்டிருந்தனர். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் எப்படி இருக்கும் என்பதும், வாழ்க்கை என்பது எவ்வளவு மகத்துவமான வரம் என்பதையும், பிறந்த முதல் நாளிலேயே வாழ்க்கை அந்த குழந்தைக்கு, கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டது. சவலைப்பிள்ளையான அவன் செவிலியர் அரவணைப்பிலிருந்து தாயின் கைகளுக்கு கையளிக்க பட்ட போது ஒரு தாய் தன் வாழ்வின் துயர் மிகுந்த நாட்களுக்குள் தள்ளப்படுகிறாள்.  ஒரு துளிப்பால் கூட ஒவ்வாமையாக மாறிப் போகும் அந்த குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாய் தேற்றுவதற்குள் செத்துபிழைக்க வேண்டியதாய் இருந்தது. அனைத்தையும் மறுதலிப்பதையே தன் பிறவி குணமாக கொண்டு அந்த குழந்தை வளர ஆரம்பிக்கிறது. முன் கோபமும், முரட்டுத்தனமுமாக அந்த குழந்தை வளரத் துவங்க, பிறவியிலிருந்தே அதை கூர்ந்து கவனிக்கும் தாய் மிகுந்த பதற்றம் அடைகிறாள். தனக்குள் உள்ளொடுங்கிய சுபாவமும், பிடிவாதமும் கொண்டு அவன் வளர துவங்குகிறான். ம