ஒரு தேயிலை தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியின் எளிய குடும்பம் அது. அந்த மலைகிராமத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் 1983ன் மே மாதத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தையை, தூக்கி கொண்டு அங்கும் இங்கும் சில செவிலியர்கள் அலைந்து கொண்டிருந்தனர். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் எப்படி இருக்கும் என்பதும், வாழ்க்கை என்பது எவ்வளவு மகத்துவமான வரம் என்பதையும், பிறந்த முதல் நாளிலேயே வாழ்க்கை அந்த குழந்தைக்கு, கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டது. சவலைப்பிள்ளையான அவன் செவிலியர் அரவணைப்பிலிருந்து தாயின் கைகளுக்கு கையளிக்க பட்ட போது ஒரு தாய் தன் வாழ்வின் துயர் மிகுந்த நாட்களுக்குள் தள்ளப்படுகிறாள். ஒரு துளிப்பால் கூட ஒவ்வாமையாக மாறிப் போகும் அந்த குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாய் தேற்றுவதற்குள் செத்துபிழைக்க வேண்டியதாய் இருந்தது. அனைத்தையும் மறுதலிப்பதையே தன் பிறவி குணமாக கொண்டு அந்த குழந்தை வளர ஆரம்பிக்கிறது. முன் கோபமும், முரட்டுத்தனமுமாக அந்த குழந்தை வளரத் துவங்க, பிறவியிலிருந்தே அதை கூர்ந்து கவனிக்கும் தாய் மிகுந்த பதற்றம் அடைகிறாள். தனக்குள் உள்ளொடுங்கிய சுபாவமும், பிடிவாதமும் கொண்டு அவன் வளர துவங்குகிறான். மனிதர்களோடு பேசுவதை முற்றிலும் தவிர்க்கும் அவன், பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அவன் வீட்டு முற்றத்தில் நின்று, எதிரே இருக்கும் மலையோடு மனதுக்குள் பேசத் துவங்குகிறான். அந்த சம்பாஷனை அவனுக்குள் வேறு உலகத்தை கட்டமைக்கிறது. மழை பேரிரைச்சலோடு வீட்டுக்கூரை மேல் விழ தொடங்கினால், அவன் ஓடிச்சென்று மழைத் தாரைகளோடு பேசத்துவங்குவான். பின், குளிரின் கொடுமை கருதி பற்ற வைக்கப்படும் குப்பைக்கூளங்களிளிருந்து எழும் தீ ஜுவாலைகளுடன் பேசத்துவங்கினான். பின் ஆகாயம் நோக்கி அவன் பார்வை திரும்ப பகலில் சூரியனோடும், இரவில் Sirius நட்சதிரத்தோடும் பேசத்துவங்குகிறான். 21 வருடங்களை கடந்த அவன் வாழ்வில் ஒரு நாள்.. "கனவில்.." அவன் கவனித்தே இராத அந்த ஊரின் இறந்து போன ஆண்கள் ஒவொருவராக வந்து ஒரு கதவை தட்டுகிறார்கள், முதல் மரியாதை திரைப்படத்தில் வருகிற காட்சியை போல் "அய்யா .. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" என்கிறார்கள். கனவில் இருந்து பதறி சிதறி எழுகிறான். அதன் பின் அவன் ஞாபகங்கள் வெடித்து சிதறுகின்றன, மூளைக்குள் கூரான ஆயுதம் குத்தியதை போல் உணர்கிறான். அப்பாகலிப்டோ படத்தில் வருகிற காட்டுவாசியைப் போல் அவன் மலைகளோடும் காடுகளோடும் தன் ஆன்மா பின்னிப் பிணைந்திருப்பதை கண்டு ஆஆஆஆஆ என்று அலறுகிறான். பிறகு தன் கனவில் வந்த மனிதர்களை பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறான். அவர்கள் தங்கள் மூடப்பட்ட கைகளுக்குள் எதையோ மறைத்து இருப்பதை அறிகிறான். ஒவ்வொரு மனிதனாக அழைத்து கைகளை விரிக்க சொல்லி கேட்கிறான். ஒரு ஆணின் கைகளில் தேயிலைக் கறை அழுந்த பதிந்த அவன் அன்பு மனைவியின் விரல்கள் இருந்தது. இன்னொருவன் கையில் கவாத்துக்கட்டை கிழித்ததில் அறுந்து விழுந்த அவன் மகளின் கால் சதைத்துண்டு. அவன் கண்களில் அடிமைகளின் சரிதம் ஒரு ஒழுகல் வெகுமதி போல் பெருக ஆரம்பித்து. அவன் நடுங்க ஆரம்பித்தான். அதன் பின்...!!! தொடரும்.
காமுற்ற ஆதிதெய்வம் நிலத்தில் கீறிய நகசித்திரம் போல் கண்களை ஆசிர்வதிக்கிறது அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது. பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன் காய்ச்சிய புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன் கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச் சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து காட்டு நெல்லியின் புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற தேதிகளுக்கு முன்பே மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.
MAY 1 2021 Going to have a greatest person who has been trying to make it through my phone.
ReplyDelete