Skip to main content

ஆதிக்குடில்


காமுற்ற ஆதிதெய்வம் 

நிலத்தில் கீறிய நகசித்திரம் போல் 

கண்களை ஆசிர்வதிக்கிறது

 அம் மலைக் கிராமம்.


உச்சியில் பெய்த மழைத்துளிகள்

கலகலவென ஓடி வந்து

கலங்கிய காவி நதியாகி

கால்களை நனைக்கிறது. 


பலாமரப்பட்டையில் தன்

காதலி பெயரை 

எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி.


மலை முகட்டின் ஆதிக்குடியில்

முதுவன்  காய்ச்சிய 

புல்தைலம் மணக்கிறது.


புல் குடியில் மூப்பன்  கட்டிய

கருகமணித் தாலியுடன்

நாளிகேர விளக்கேற்றும்

புலத்தி.


மலைப் புலத்தியின் சங்கின்

சில்வண்டின் ரீங்காரமென

குலவைச்  சத்தம்.


ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து 

காட்டு நெல்லியின் 

புளிப்பை ருசிக்கும் கருப்பியை

கடந்து செல்கிறேன்.


முள்வேலி மீது படர்ந்திருக்கிறது

முல்லையின் கந்தம்..

நாளிகேர நிழலில் வளரும்

நந்தியார்வட்டை.


தேக்கு மரத்தின் சிறிய 

பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற

கண்ணாடிக் கூண்டுக்குள்

குழந்தை இயேசுவுடன் மரியன்னை.


நிச்சயிக்கப்பெற்ற 

தேதிகளுக்கு முன்பே 

மன்னிப்பை கேடயமாகப்

பயன்படுத்திக் கொண்ட

ஆலீஸின் வீடு.


கால் நூற்றாண்டு கடந்தும்

என் ஆன்மாவை கருணையோடு

ஆசிர்வதிக்கிறது காதல்.


Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.. நிராகரிப்புகளால் என் இதயம் கிழிகிற போதெல்லாம் உன் நினைவென்னும் ஊசியால் நான் தைத்துக்கொண்ட என் கடந்த காலங்கள்..