வேர்வையில் நாறிய உடலும்
கசங்கிய உடைகளும்
கலங்கிய விழிகளுமாய்
பசியோடு பெருநகர வீதிகளில்
வேலைதேடும் யாவருக்கும்
வாய்த்து விடுவதில்லை
பெட்ரோல் நிரப்பிய வாகனமும்,
புகைப்பிடிக்க
தேநீர் பருகவென
சில்லறை தந்துதவும் நண்பர்கள்..
தேடித் தெருவில் எதையோ தின்று
சுதந்திரமாய் பெருவழிகளில் அலையும்
தெரு நாய்களுக்கிருக்கும் மரியாதை கூட
எனக்கிருக்கப் போவதில்லை
ஒரு நல்ல வேலைகிடைக்கும் வரை.
தன் மீது விழும்
தூய மழைநீரை
பற்றிய கவலைகள் ஏதுமற்று
தேங்கிக்கிடக்கும் கூவமென
கனவுகள்.
பெருநகர வீதிகளில் ஓடும்
மழைவெள்ளம் போலாகும் மனசு
நகரத்தெருக்களில்
சோற்றுக்க்காகவென
ஓடும் அவசரம்
வீதிகளுக்கடியில் ஓடிகொண்டிருக்கும்
சாக்கடைஎன உள்ளுக்குள்
நாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு
நகரமாகும் மனசின் நியாபக தெருக்களில்
கேட்ப்பாரற்றுக் கிடக்கிறது
புத்தகப் பையோடு
கொஞ்சம் புகழையும்
சுமந்த என் இறந்தகாலம்...
Comments
Post a Comment